கிருதுமால் நதி ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆண்டுதோறும் அரசாணை தேவையா
மதுரை : கிருதுமால் நதியின் நான்கு மாவட்ட ஆயக்கட்டு பாசனத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்கின்றனர் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர்.வைகையின் கிளை ஆறான கிருதுமால் நதி மதுரை நாகமலை புதுக்கோட்டை அடிவாரத்தில் துவங்கி ராமநாதபுரம், சிவகங்கை விருதுநகர் வழியாக 86 கிலோமீட்டர் துாரம் பயணித்து 42ஆயிரத்து 769 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தருகிறது. இறுதியாக ராமநாதபுரம் கமுதியைத் தாண்டி கடலில் சேர்கிறது. தற்போது 50 சதவீத அளவுக்கே பாசன தண்ணீர் கிடைக்கிறது. வைகை விரகனுார் அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் செல்லும் 1000 கனஅடி திறன் கொண்ட கால்வாயில் புதர் மண்டியதால் 678 கனஅடி தண்ணீர் தான் செல்கிறது. விராட்டிபத்து கொக்குளப்பியில் மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் விடப்படுகிறது. மதுரை நகரில் 20 கிலோமீட்டர் துாரம் வரை கழிவுநீர் ஓடையாகவும் எஞ்சிய பகுதிகளில் கால்வாய் முழுவதும் வேலிக்கருவேல மரங்களால் புதராகி விட்டது. கிருதுமால் நதி மீட்டுருவாக்கம் மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.7. 36 கோடியில் நீர்வளத்துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.குண்டாறு வடிநில கோட்டத்தின் கீழ் மண் வெட்டுவது, மண் அள்ளுவது, மண் கரையில் கொட்டுவது ஆகிய பணிகளுக்கு 50 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்துக் கண்மாய்கள், கால்வாய்களை துார்வாரி சீரமைத்து நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்கின்றனர் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர்.மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன் தலைமையில்கிருதுமால் நதியை ஆய்வு செய்தபோது மாநில தலைவர் மாரிமுத்து, செயலாளர் ராம முருகன், நிர்வாகிகள் மச்சேஸ்வரன், சிவாஜி கணேசன், முத்தையா, பாண்டி, மலைச்சாமி, அய்யனார், ராம் பாண்டியன், இளங்கோவன், நரிக்குடி ஒன்றியத் தலைவர் முருகன் கலந்து கொண்டனர்.அர்ச்சுணன் கூறியதாவது: வைகையாற்றின் விரகனுார் அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயின் திறனை 5000 கனஅடியாக அகலப்படுத்த வேண்டும். கிருதுமால் நதியில் உள்ள கால்வாய், கண்மாய்களில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஆண்டுதோறும் பிரத்யேக அரசாணை வெளியிட்டு தண்ணீர் திறக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மத்தியில் துவங்கினாலும் நவம்பர் கடைசி அல்லது டிசம்பரில் தான் ஆண்டுதோறும் அரசாணை வெளியிட்டு தண்ணீர் திறக்கப்படுகிறது. இது பருவம் தவறிய விவசாயத்திற்கு வழிவகுக்கிறது. நீர்வளத்துறை ஆவணங்களின் படி நிரந்தரமாக அரசாணை வெளியிட்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.