சிறை வைக்கப்பட்ட ஜெயில் காளியம்மன்
மதுரை: மதுரை வடக்கு சித்திரை வீதி மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே, புதர் மண்டிய சந்தில் ஜெயில் காளியம்மன் 'சிறை' வைக்கப்பட்டது பக்தர்களை வேதனையடையச் செய்துஉள்ளது.ராணி மங்கம்மாள் மதுரையை ஆண்ட காலத்தில் இப்பகுதியில் சிறை இருந்தது. அங்கிருந்த அம்மன் 'ஜெயில் காளியம்மன்' என அழைக்கப்பட்டார். காலப்போக்கில் அங்கு சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் உருவானது. சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த மார்க்கெட் இடமாற்றப்பட்டு மாநகராட்சி சார்பில் மல்டி பார்க்கிங் கட்டப்பட்டது. ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் வழிபட்ட கோயில் இடிக்கப்பட்டது. சிலைகளை அருகே உள்ள புதர்மண்டிய சந்தில் கிடப்பில் போட்டனர். தற்போதும் பக்தர்கள் அச்சந்திற்குள் சென்று வழிபட குப்பை, சிறுநீர் நாற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கூறியதாவது: இக்கோயிலின் விநாயகர், காளியம்மன், சப்த கன்னியர் சிலைகள் ஆயிரம்ஆண்டுகள் பழமையானவை. கலைநயமிக்கவை. பாதுகாப்பான கோயில் சிலைகளே திருடு போகும் இக்காலத்தில், சிலைகள் கேட்பாரற்று கிடப்பது வேதனை தருகிறது. ஹிந்து மக்களின் உணர்வை மதித்து பார்க்கிங் வளாகத்தில் இடம் ஒதுக்கி, சிலையை பிரதிஷ்டை செய்ய மேயர், கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களை போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.