ஒருமாதத்தில் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுகிறது இயக்குநர் முத்துக்குமார் தகவல்
மதுரை: '' ஒரு மாதத்தில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என அதன் இயக்குநர் முத்துக்குமார் தெரிவித்தார். மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு, டிராவல்ஸ் கிளப் மதுரை, தென் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் சுற்றுலா சங்கம், சுற்றுலா ஒருங்கிணைப்பு குழு, மதுரை இன்பிரா மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் நேற்று உள்நாட்டு, சர்வதேச விமான நிறுவன சேவைகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். எம்.பி., வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் பேசியதாவது: அக். 1 முதல் மதுரை விமான நிலையம் தினமும் 24 மணி நேரம் இயங்க செய்ததில் பல சவால்கள் இருந்தன. இன்னும் ஒரு மாதத்தில்சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. பயணிகளுக்கு நவீன கார் பார்க்கிங், மருத்துவ அறைகள் உள்ளன. சிறு கடைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு வாரத்திற்குள் மின்சார வாகனங்களுக்கு 2 சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும். மேம்பட்ட சரக்கு ஏற்றுமதி இறக்குமதி வசதிகள் பழைய டெர்மினலில் அமைக்கப்படவுள்ளது. விமான நிலையத்திற்கென தனி போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்தப்படும். 24 மணி நேர சேவை மதுரைக்கு பல தொழில் சேவைகளில் மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் உதவும் என்றார்.