உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கமிஷனர் உத்தரவை மதிக்காத மதுரை நகர் ஆயுதப்படை

கமிஷனர் உத்தரவை மதிக்காத மதுரை நகர் ஆயுதப்படை

மதுரை : மதுரை நகர் ஆயுதப்படையில் கமிஷனர் லோகநாதன் உத்தரவையும் மீறி சிலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படையில் 15 பிரிவுகள் உள்ளன. 6 நேரடி பெண் எஸ்.ஐ.,க்கள், 63 எஸ்.எஸ்.ஐ.,க்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதில் 29 எஸ்.எஸ்.ஐ.,க்கள் கமிஷனர் அலுவலக பணி, கேண்டீன், பராமரிப்பு என எந்த பாதுகாப்பு பணிக்கும் வரமுடியாமல் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் நேரடி எஸ்.ஐ.,க்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யாமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். கைதிகள் வழிக்காவல், பாதுகாப்பு பணிக்கு எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசார் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறார்கள். போலீசார் கூறியதாவது: இப்படை பிரிவுகளில் சிலர் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இதையறிந்த கமிஷனர் லோகநாதன் உடனடியாக அவர்களுக்கு மாற்று பணி வழங்க உத்தரவிட்டார். கமிஷனரை திருப்திபடுத்தும் வகையில் சில பிரிவுகளில் மட்டுமே ஆட்களை மாற்றிவிட்டு அதிகாரிகளின் அலுவலகங்களில் பணியாற்றுவோரை மாற்றவில்லை. அவர்கள் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர். அரசு உத்தரவுபடி போலீசாருக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு அளிக்க வேண்டும். ஆனால் ஆள் பற்றாக்குறையை காரணம்காட்டி ஓய்வு அளிக்க மறுக்கப்பட்டு வருகிறது. ஈட்டிய விடுப்பு ஆண்டுக்கு 15 நாள் போலீசார் எடுக்க உரிமை உண்டு. ஆனால் 5 நாட்கள் கேட்டால் 3 நாட்களுக்கு மட்டும்தான் அனுமதி தருகிறார்கள். கேட்கும் விடுமுறையை அளிக்க கமிஷனர் உத்தரவிட்டும் அது மறுக்கப்படுகிறது. அதேபோல் அவசர விடுப்பு கேட்டு விண்ணப்பித்தால், மறுநாள் காலையில் நடக்கும் 'ரோல் காலில்' ஆஜராகிவிட்டு செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காகதான் அவசர விடுப்பு கேட்கிறோம். ஆனால் மறுநாள் 'ஆஜராகி'தான் செல்ல வேண்டும் என்கிறார்கள். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. எங்கள் குறையை தீர்க்க கமிஷனர் தயாராக இருந்தாலும், ஆயுதப்படையில் உள்ள சிலர் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இது கமிஷனருக்கு தெரியுமா என தெரியவில்லை. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை