மனநலமா... செய்வினைக் கோளாறா மருத்துவர்கள் சொல்வது என்ன
மதுரை: ''மனநல பிரச்னையை புரிந்து கொள்ளாமல் 'செய்வினைக் கோளாறு' என நினைக்கும் போது மனநல சிகிச்சை பெறுவதற்கான இடைவெளி அதிகமாகிறது'' என மதுரை அரசு மருத்துவமனை மனநலத்துறைத்தலைவர் கீதாஞ்சலி தெரிவித்தார். மனநல மருத்துவத்துறை சார்பில் நடந்த உலக மனநல தினவிழாவில் டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் மல்லிகா, டாக்டர்கள் செல்வராணி, முரளிதரன் கலந்து கொண்டனர். கீதாஞ்சலி பேசியதாவது: இந்தியாவின் மனநல ஆய்வறிக்கை படி 13 சதவீதம் பேர் மனநலப் பிரச்சனைகளுடன் வாழ்கின்றனர். 10 சதவீதம் பேருக்கு வாழ்நாள் முழுவதும் மனநலக் குறைபாடு உருவாகும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான மனநலப் பிரச்னைகளுக்கு 80 முதல் 85 சதவீதம் வரை சிகிச்சை இடைவெளி இருப்பதே காரணம். மனநல விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம். உறவினரில் யாராவது மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் குடும்பத்தினர் அதை ஒப்புக்கொள்வதில்லை. மேலும் மனிதர்களின் நடத்தை மாற்றங்களை 'காத்து கருப்பு அல்லது செய்வினைக்கோளாறு' என நினைத்து லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கும் சிலர், முறையான மருத்துவ சிகிச்சை பெறாததும் மனநோய் அதிகரிக்க காரணமாகிறது. உண்மையை மறைக்காமல் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளின் மூலம் முழுமையாக குணமடையலாம் என்றார். நிறைவான வாழ்க்கைக்கு முக்கியம் உடல் நலமா அல்லது மனநலமா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி நர்சிங் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் அனுசியா நடுவராக பங்கேற்றார். டாக்டர் அருண் பிரசன்னா நன்றி கூறினார்.