உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பால் வார்த்தது ஆவின் தீபாவளிக்காக ரூ.5.63 கோடி ஊக்கத் தொகை

பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பால் வார்த்தது ஆவின் தீபாவளிக்காக ரூ.5.63 கோடி ஊக்கத் தொகை

மதுரை: மதுரையில் தீபாவளி போனஸாக ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு இந்தாண்டு ரூ.5.63 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லாபத்தில் இயங்கும் ஆவின் ஒன்றியங்களில் தீபாவளி பண்டிகையின்போது பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். மதுரை ஆவின் 2024 - 25ல் ரூ.50 கோடியே 88 லட்சத்து 81 ஆயிரத்து 813 லாபம் ஈட்டியுள்ளது. இதற்காக பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் 5 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 107 லிட்டர் பால், ஆவினுக்கு வழங்கியுள்ளது. தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க விதிகளின்படி லாபம் ஈட்டிய ஆவின், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இதன்படி 650 சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் வழங்கிய பாலின் அளவுக்கு ஏற்ப இந்தாண்டு ரூ.5 கோடி 63 லட்சத்து 43 ஆயிரத்து 107 ஊக்கத் தொகையாக வழங்க ஆவின் கமிஷனர் ஜான் லுாயிஸ் அனுமதி வழங்கியுள்ளார். மதுரை பொது மேலாளர் சிவகாமி கூறுகையில், ''துறை அமைச்சர், கமிஷனர் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் மதுரை லாபம் ஈட்டியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு தான் லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்கத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 ஆயிரம் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்றார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாவட்ட செயலாளர் உக்கிரபாண்டி கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் லிட்டருக்கு 50 காசு வழங்கப்பட்டது. தற்போது லிட்டருக்கு ரூ. 1 வீதம் ஊக்கத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் அர்ப்பணிப்பு, அதிகாரிகள் ஒத்துழைப்பும் தான் மதுரை ஆவின் லாபத்தில் இயங்க காரணம். உற்பத்தியாளர்கள் இந்தாண்டு தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை