உலக தமிழ்ச்சங்கத்தில் அமைச்சர் ஆய்வு; ஒலி, ஒளிக்காட்சிக்கு ஏற்பாடு
மதுரை; மதுரையில் அரசு அச்சகம், தமிழ்க் காட்சிக் கூடம், காந்தி மியூசியம், உலகத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார். அரசு அச்சகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் குறை கேட்டறிந்தார். உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். தமிழ்க் காட்சிக் கூடத்தை பார்வையிட்டவர், அதிக பார்வையாளர்கள் வருவதற்கு ஏதுவாக அறிவிப்பு பலகைகள் வைக்கவும், வளாகத்தை சுத்தமாக பராமரிக்கவும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பார்வையிட உரிய வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார். காந்தி மியூசியம் சென்ற அமைச்சர், அதனை புனரமைப்பு செய்வதற்க முதல்வர் ரூ.10 கோடி நிதிஒதுக்கி உள்ளதாக கூறினார். பணிகளை விரைவுபடுத்தி, அக்டோபருக்குள் முடிக்கவும் உத்தரவிட்டார். பின்னர் உலகத் தமிழ்ச்சங்கம் சென்றார். கலை பண்பாட்டுத் துறை சார்பில், தென்மாவட்ட மாணவர்கள் பயன்பெற இக்கல்வியாண்டில் புதிய அரசு கவின் கல்லுாரி துவங்கி, 40 மாணவர்கள் பயில்வதற்கு வசதியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கல்லுாரிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும்படி அறிவுறுத்தினார். விரைவில் ஒலி, ஒளிக் காட்சி நடத்தவும், தமிழர் விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடும் வகையில் திட்டம் உருவாக்குவது பற்றியும் ஆலோசனை நடத்தினார். துறை செயலர் ராஜாராமன், கலெக்டர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ., தளபதி, உலகத்தமிழ்ச்சங்க தனி அலுவலர் அவ்வை அருள், இயக்குனர் பர்வீன் சுல்தானா உடனிருந்தனர்.