உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கொலை செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது

மதுரையில் கொலை செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது

மதுரை:மதுரையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு, தற்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில், 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஒளிப்பதிவு செய்த சரவணமருது சவுந்தரபாண்டி, மீனாட்சி சோமன் ஆகியோர் விருதுக்கு தேர்வாகினர். கந்தர்வன் எழுதிய 'சனிப்பிணம்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவான இந்த குறும்படத்தை நவீன் இயக்கினார். இது உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்றும் பல விருதுகளை வென்றுள்ளது. மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஒளிப்பதிவாளர் சரவணமருது சவுந்தரபாண்டி இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 2023 அக்., 14ம் தேதி வீட்டை விட்டு சென்ற சரவணமருதுவை காணவில்லை என, அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், பெண் பிரச்னையில் சக்திவேல் என்பவர் தன் மாமனார், மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து சரவண மருதுவை கொலை செய்து, உடலை கீரனுார் கண்மாய் பகுதியில் புதைத்தது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது சரவணமருதுவுக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை