உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலைச்சுற்றி வணிக வளாகம் அமைக்க தடை கோரி வழக்கு தற்போதைய நிலை தொடர உத்தரவு

கோயிலைச்சுற்றி வணிக வளாகம் அமைக்க தடை கோரி வழக்கு தற்போதைய நிலை தொடர உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் பால்வண்ணநாதர் சுவாமி கோயிலைச் சுற்றிலும் வணிக வளாகம் அமைக்க தடை கோரிய வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. பா.ஜ., ஆன்மிகம், கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தாக்கல் செய்த பொதுநல மனு: கரிவலம்வந்தநல்லுார் பால்வண்ணநாதர் சுவாமி கோயில் பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இது அக்னி ஸ்தலம். இதன் சுற்றுச்சுவரைச் சுற்றிலும் வணிக வளாகம் அமைக்க அறநிலையத்துறை அனுமதித்துள்ளது. அதற்கான பணி நடக்கிறது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. பக்தர்களின் போக்குவரத்து, தேர் வலம் வருவதற்கு இடையூறு ஏற்படும். ராஜகோபுரம் சேதமடைய வாய்ப்புள்ளது. வணிக வளாகம் அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜரானார். கோயில் தரப்பில்,'பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கடைகள் கட்டப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள்: காலியிடம் உள்ளது என்பதற்காக கோயிலை மறைக்கும் வகையில் கட்டு மானம் மேற்கொள்வது ஏற்புடையதல்ல. 'பிராப்பர்ட்டீ டெவலப்பர்'களை போல் நடந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது. பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். கலெக்டர், அறநிலையத்துறை இணை கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. நவ., 25 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி