தமிழ்ச் சங்கத்தில் நுால் வெளியீடு
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மீனாட்சி கலைக்கல்லுாரி, தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்க் கூடல், நுால் வெளியீடு நிகழ்ச்சிகள் நடந்தன. இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர் யோகேஸ்வரி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் அம்பை மணிவண்ணன் 'மதுரையும் வரலாற்றுச் சின்னங்களும்' எனும் தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், 'தாலமி தனது குறிப்புகளில் மதுரை பற்றி கூறியுள்ளார். மதுரையின் கோட்டைச் சுவர், மதில்கள், அகழிகள் ஜோகன்பிளாக்பெர்க் எனும் ஆங்கிலேய ஆட்சியாளரால் சரிசெய்யப்பட்டது. தாமரைப்பூ வடிவில்மதுரை நகர் விளங்கியதாய் பரிபாடல் கூறுகிறது' என்றார். உதவிப் பேராசிரியர் ராஜேஸ்வரி,வள்ளியம்மை, சாய்மீரா, ஹூஸ்னாரா பானு நுால் மதிப்புரை செய்தனர். எழுத்தாளர் யுகாவின் கட்டுரை நுால் 'உருமாற்றம்', அழகையாவின் சிறுகதை நுால்'நெல்லை தமிழ் சிறுகதைகள்', இளங்கோவன் கார்மேகம் எழுதிய 'தபால்' எனும் நாடக நுால், கவிஞர் கவிஜியின் 'ஆனைமலைகாடுகளில் சுள்ளி பொறுக்குகிறேன்' எனும்கவிதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. தமிழ்ச் சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றிகூறினார்.