உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அருவிமலை அடிவாரத்தில் அடைக்கலம் கல்வெட்டு

அருவிமலை அடிவாரத்தில் அடைக்கலம் கல்வெட்டு

மதுரை : கொட்டாம்பட்டி அருகே கச்சிராயன்பட்டி ஊராட்சி அருவிமலை அடிவாரத்தில் உள்ள பால்குடியில் 600 ஆண்டுகள் பழமையான பாண்டியர்கள் கால ஆசிரியம் (அடைக்கலம்) கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை உறுப்பினர்கள் தேவி, அறிவுசெல்வம், கதிரேசன், தமிழ்தாசன், கல்லானை சுந்தரம் ஆகியோர் பால்குடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் நான்கடி உயரம் 3 அடி அகலம் கொண்ட பலகையால் ஆன கல்லில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய ஆசிரியம் கல்வெட்டு இருந்ததாக தெரிவித்தனர். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய உறுப்பினர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி கல்வெட்டை படியெடுத்தனர்.கல்வெட்டு வாசகங்கள் குறித்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறியதாவது: கல்வெட்டின் கீழ் பகுதியில் அஷ்டமங்கலம் சின்னங்களில் ஒன்றான பூரண கும்பம் செதுக்கப்பட்டுள்ளது. 14ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்த சுந்தரபாண்டியன் காலத்தில் வைகாசி 12வது நாளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் காலத்தில் மிகப்பெரிய கலகம் ஏற்பட்ட போது மேலுார் பகுதியில் குறுநில தலைவனாக இருந்த தெய்வச்சிலை பெருமான் என்னும் வீர பராக்கிரம சிங்கதேவன், துருக்கர் படை எடுப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளான் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.தற்போது பால்குடி என்னும் பெயர் கொண்ட இந்த ஊர் அருவிமலை கல்வெட்டு ஒன்றில் பாக்குடி எனப்படுகிறது. இங்கு இரும்புக்காலம், பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் பதுக்கைகள், பழமையான விநாயகர் கோயில் உள்ளது. அருவிமலையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் படுக்கைகள், செஞ்சாந்து ஓவியங்கள், 13ம் நுாற்றாண்டு சிவன் கோயிலின் எஞ்சிய பாகங்கள் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை