உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைகொடுக்காத விர்ச்சுவல் நண்பர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கில் டீன் தகவல்

கைகொடுக்காத விர்ச்சுவல் நண்பர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கில் டீன் தகவல்

மதுரை: ''இளைஞர்கள், இளம்பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத, பழகாத 'விர்ச்சுவல் நண்பர்கள்' அதிகமாக உள்ளனர். நிஜத்தில் நட்பு வட்டாரம் குறைவு என்பதால் பிரச்னைகளை கையாளத் தெரியாமல் போதையின் பாதையில் செல்கின்றனர்'' என மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் தெரிவித்தார்.மருத்துவமனை மனநலத்துறை சார்பில் நடந்த சர்வதேச போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. துறைத்தலைவர் கீதாஞ்சலி வரவேற்றார். மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, பேராசிரியர்கள் அமுதா, ஜான் சேவியர் சுகதேவ், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் முன்னிலை வகித்தனர்.டீன் பேசியதாவது: பல ஆண்டுகளாக போதை பிரச்னை இருந்தாலும் தற்போது போதை என்றால் என்னவென்று பார்க்க வேண்டும் என்கிற எதிர்மறை சிந்தனை அதிகரித்துள்ளது. இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத 'விர்ச்சுவல் நண்பர்கள்' அதிகம் உள்ளனர்.நட்பு வட்டாரம் குறைவு என்பதால் தங்களுக்கு பிரச்னை வரும் போது கையாளத் தெரியாமல் போதையின் பாதையில் செல்கின்றனர். கல்லுாரி மாணவர்களிடம் இப்பழக்கம் அதிகரிப்பது கவலை தருகிறது. நல்ல நண்பர்கள் மூலம் போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள் மீண்டு வரவேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் மீளமுடியாது. ஆரம்பத்திலேயே பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றார்.டாக்டர்கள் கிருபாகர கிருஷ்ணன், அருண் பிரசன்னா, தீபா, அஸ்மா, பிரபா, லாய்ட்ஸ் பங்கேற்றனர். உதவி பேராசிரியை கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ