களைகட்டும் தீபாவளி ஷாப்பிங் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மதுரை : மதுரையில் தீபாவளி ஷாப்பிங் களைகட்டுவதால் நேதாஜி ரோடு பகுதியில் இன்று(அக்.15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட் அடுத்துள்ள நேதாஜி ரோடு, கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு செல்லும் மேலவடம்போக்கி தெரு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. நேதாஜி ரோட்டில் இருந்து ஜான்சிராணி பூங்கா நோக்கி செல்ல எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. அதற்கு பதில் மேலவடம்போக்கி தெரு, டி.எம். கோர்ட் சந்திப்பிற்கு சென்று மேலமாசிவீதி செல்ல வேண்டும். டி.எம். கோர்ட் சந்திப்பிலிருந்தும் கூடலழகர் பெருமாள் கோயில் சந்திப்பிலிருந்தும் எந்த ஒரு வாகனமும் மேலவடம்போக்கி தெரு வழியாக செல்ல அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் டி.எம். கோர்ட் சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி, நேதாஜி ரோடு வழியாக திருப்பரங்குன்றம் ரோட்டிற்கு செல்ல வேண்டும். மேலவடம்போக்கி தெருவில் எந்த ஒரு வாகனமும் தீபாவளி வரை நிறுத்த அனுமதி இல்லை. ஜான்சி ராணி பூங்கா முதல் முருகன் கோயில் வரை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலக்கோபுரத்தெரு, மேலஆவணிமூலவீதியிலிருந்து வரும் வாகனங்கள் கான்சாமேட்டுத்தெரு, டி.எம். கோர்ட், மேலமாசிவீதி வழியாக முருகன் கோயில் சந்திப்புக்கு செல்ல வேண்டும். மேலமாசிவீதியிலிருந்து ஜான்சி ராணி பூங்கா செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். பெருமாள் தெப்பம் சந்திப்பிலிருந்து எந்த ஒரு வாகனமும் நேதாஜி ரோடு செல்ல அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் டவுன்ஹால் ரோடு வழியாக செல்ல வேண்டும். நேதாஜி ரோட்டிலிருந்து பச்சை நாச்சியம்மன் கோயில் தெரு வழியாக பெருமாள் தெப்பத்திற்கு வாகனங்கள் செல்லலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.