உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு சேவைக்கு இரு வரியா போர்வெல், ரிக் உரிமையாளர்கள் வேதனை

ஒரு சேவைக்கு இரு வரியா போர்வெல், ரிக் உரிமையாளர்கள் வேதனை

மதுரை : 'ஒரே நாடு ஒரே வரிக்கு மாறாக ஒரு சேவைக்கு இருவரி வசூலிப்பது பாரபட்சமாக உள்ளது' என மதுரை மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர்கள், ஏஜென்டுகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் மோகன், பொருளாளர் மாரியப்பன் கூறியிருப்பதாவது: ​ஜி.எஸ்.டி., வரியை அறிமுகப்படுத்தியபோது, 'ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கை இந்தியப் பொருளாதாரத்தில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும். வரி விதிப்பை எளிதாக்கி, நாடு முழுவதும் சீரான சந்தையை உருவாக்கும் என்ற கனவை விதைத்தது. ஆனால், போர்வெல் சேவை போன்ற சில துறைகளில், இந்தக் கனவு முழுமையாக நனவாகவில்லை. தொழிலில் இரட்டை வரிச்சுமை போர்வெல் இயந்திரங்களுக்கான டீசலுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு 'வாட்' வரி செலுத்தப்படுகிறது. அதே டீசலைப் பயன்படுத்தி போர்வெல் அமைக்கும் சேவைக்கும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. டீசல் பயன்பாட்டுக்கு வரி செலுத்திய பிறகு, அதே செயல்பாட்டின் விளைவான சேவைக்கும் வரி விதிப்பது, இரட்டை வரிச்சுமையாகிறது. ​ஜி.எஸ்.டி.,யின் நோக்கம், வரிச்சுமையை குறைத்து, தொழில்களை மேம்படுத்துவது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால், பெரும்பான்மை வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பல துறைகள் இந்த மாற்றத்தால் பயனடைந்துள்ளன. ஆனால், போர்வெல் தொழில் போன்ற துறைகள், இந்த பலன்களில் விடுபட்டுள்ளன. இந்த இரட்டை வரி ஜி.எஸ்.டி., - யின் அடிப்படை நோக்கத்திற்கு முரணாக உள்ளது. ​தீர்வுக்கான வழிமுறைகள் ​இந்த பாரபட்சத்தை நீக்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீர்வுகாண வேண்டும். போர்வெல் சேவைக்கான ஜி.எஸ்.டி., வரியை குறைப்பது, டீசல் பயன்பாட்டுக்கு வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம். விவசாயம், குடிநீருக்கு உதவும் போர்வெல் தொழிலுக்கு, சிறப்பு வரிச் சலுகை அறிவிக்கலாம். டீசல் மற்றும் சேவைக்கான வரியை ஒருங்கிணைத்து, ஒரு முறை வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்தலாம். ​ஒரே நாடு, ஒரு வரி என்ற கொள்கை வெற்றிபெற அனைத்துத் துறைக்கும் ஒரே சீரான நீதி வழங்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை