உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / சுருக்குமடி வலையில் மீன் பிடிப்பதை தடுக்க கோரி தரங்கம்பாடியில் மீனவர்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலையில் மீன் பிடிப்பதை தடுக்க கோரி தரங்கம்பாடியில் மீனவர்கள் உண்ணாவிரதம்

மயிலாடுதுறை,:தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் மற்றும் இன்ஜின் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்வதை தடுக்க கோரி, தரங்கம்பாடியில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில், 28 மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 450 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் பைபர் படகுகளை கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 40 ஆயிரம் மீனவர்களும், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி சுருக்குமடி, இரட்டை மடி வலைகள் மற்றும் அதிவேக இன்ஜின் பயன்படுத்தி மீன் பிடித்து தொழில் செய்வதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக இதுகுறித்து புகார் அளித்தும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தக்கோரியும் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராமங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி கடை வீதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி வணிகர்கள் கடைகளை அடைத்து, மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார், தரங்கம்பாடி தாசில்தார் சதீஷ், சீர்காழி டி.எஸ்.பி., அண்ணாதுரை ஆகியோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவ கிராமங்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை