வேலை தருவதாக மோசடி தம்பதி உட்பட மூவருக்கு காப்பு
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கருவாழ்க்கரையை சேர்ந்தவர் கிரிஜா, 33. இவர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணியில் உள்ளதாக கூறி, பலரையும் நம்ப வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட வேலைகளை வாங்கி தருவதாக கூறி, தன் கணவர் ரமேஷ், 44, அவரது தாய் கல்பனா, 50, ஆகியோர் உதவியுடன், 40 பேரிடம், 86 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றினார். பணம் கொடுத்தவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. அதையடுத்து, பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த அனுசியா, மனோஜ் உள்ளிட்ட சிலர், மயிலாடுதுறை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கிரிஜா, ரமேஷ், கல்பனா ஆகிய மூவரையும் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.21 லட்சம் மோசடி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அதியமான் தெரு ராஜாராம் மகன் தென்னவன், 34, என்பவரை தொடர்பு கொண்டவர், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார். அதை உண்மை என நம்பிய தென்னவன், பல தவணைகளாக 11 லட்சம் ரூபாய் அனுப்பினார். பணத்தை பெற்ற அந்த நபர் லாபத்தை கொடுக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தென்னவன், சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளத்துாரை சேர்ந்த 41 வயது பெண், காரைக்குடியில் தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரையும் இதுபோலவே ஏமாற்றி 10 லட்சம் ரூபாயை மோசடி செய்தனர். சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.