புதுச்சேரி சாராயம் கடத்திய நால்வர் கைது
நாகப்பட்டினம்:காரைக்காலில் இருந்து நாகைக்கு இரு சக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய நால்வரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில், நாகை பகுதிக்கு சாராயம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு, இ.சி.ஆர்., சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாஞ்சூரில் இருந்து, இரண்டு பைக்குகளில் சாராய பாட்டில்களை கடத்திச் சென்றவர்களை மடக்கி பிடித்தனர்.விசாரணையில், நாகை, செல்லூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜெல்சன்,23, ஒரத்தூர், ஆகாஷ்,18, பாப்பாக்கோவில் ரபீக்,20, டி.ஆர். பட்டினம் தமிழ்வேந்தன்,51, என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கடத்தி வந்த 600 குவார்ட்டர் சாராய பாட்டில்கள் மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.