உழவர்சந்தை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.1.80 கோடியில் மதிப்பீடு: வணிகத்துறை ஆணையர்
உழவர்சந்தை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.1.80 கோடியில் மதிப்பீடு: வணிகத்துறை ஆணையர்நாமக்கல், :'உழவர் சந்தை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, 1.80 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது' என, வேளாண் விற்பனை, வணிகத்துறை ஆணையர் பிரகாஷ் கூறினார். நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையரும், முதன்மை செயலாளருமான பிரகாஷ், எம்.பி., ராஜேஸ்குார் ஆகியோர் நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, மழைக்காலங்களில் கழிவுநீர் உள்ளே வராமல் தடுக்க சாலை மட்டத்திற்கு தரையை உயர்த்துவதற்கு கருத்துரு அனுப்ப அறிவுறுத்தினர். மேலும், உழவர் உற்பத்தி நிறுவனத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை, சமூக வளைதலம் மற்றும் இணைய வழிமூலம் விற்பனை செய்வதற்கு ஆலோசனை வழங்கினர்.அப்போது, வணிகத்துறை ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: இந்த உழவர்சந்தை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், மழைக்காலங்களில் நீர் சூழ்ந்துவிடுகிறது. இவற்றை நிவர்த்தி செய்யவும், உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தவும், பொறியியல் துறை மூலம், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.தினமும் வியாபாரம் தடைபடாத வகையில் இத்திட்டத்தை செயல்டுத்த ஒழுங்குமுறை விற்பனை கூட நிதியில் இருந்து மேற்கொள்ளவும், அதற்கு உண்டான அனைத்து பணிகளையும் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நாமக்கல் வேளாண் துணை இயக்குனர் நாசர், விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர், வேளாண் அலுவலர்கள் பூங்கொடி, மைதிலி, கோமதி உள்பட பலர் பங்கேற்றனர்.