பசிறு மலையில் காட்டு தீ: 50 ஏக்கரில் மரங்கள் சாம்பல்
பசிறு மலையில் காட்டு தீ: 50 ஏக்கரில் மரங்கள் சாம்பல்நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே, பசிறுமலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் காட்டுப்பன்றி, மயில், உடும்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று காலை, 11:00 மணியளவில் பசிறுமலை பகுதியில் தீப்பற்றியது. இதைக்கண்ட அப்பகுதியினர், ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், பசிறுமலை மேல் பகுதியில் தீ பரவியது. மேல் பகுதியில் காட்டு தீ பரவியதால், வனத்துறையினர் மலைக்கு மேல் சென்று தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டனர். பின், மலைப்பகுதி முழுவதும் பரவியதால், 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள், அரிய வகை செடிகள் எரிந்து சாம்பலாகின. இந்த தீ மாலை வரை கட்டுக்குள் வராமல் எரிந்து கொண்டிருந்தது. மரங்கள் மட்டுமின்றி, மயில், பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் கருகி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.