மஞ்சள் வரத்து 3 மடங்கு உயர்வு655 மூட்டை ரூ.43 லட்சத்திற்கு ஏலம்
மஞ்சள் வரத்து 3 மடங்கு உயர்வு655 மூட்டை ரூ.43 லட்சத்திற்கு ஏலம்நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டையில் நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில், 43 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானது. மூன்று வாரத்தில் மஞ்சள் வரத்து, மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த வாரம் மஞ்சள் வரத்து தொடங்கியது. சீசன் தொடங்கிய முதல் வாரம், 655 மூட்டை மஞ்சள், 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,522 ரூபாய், அதிகபட்சம், 15,339 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 7,002 ரூபாய், அதிகபட்சம், 12,339 ரூபாய்; பனங்காலி, 13,899 ரூபாயிலிருந்து, 27,500 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 425, உருண்டை, 190, பனங்காலி, 40 மூட்டைகள் என, 655 மூட்டை மஞ்சள், 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த, 4ல் மஞ்சள் சீசன் தொடங்கியது. அன்று, 179 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வரத்தானது. ஆனால், மூன்றாவது வாரமான நேற்று, மூன்று மடங்கிற்கு மேலாக, 655 மூட்டை மஞ்சள் வரத்தானது குறிப்பிடத்தக்கது.