உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செய்கூலி, சேதாரம் இல்லை எனக்கூறி சாப்ட்வேர் இன்ஜி.,டம் ரூ.60,000 மோசடி

செய்கூலி, சேதாரம் இல்லை எனக்கூறி சாப்ட்வேர் இன்ஜி.,டம் ரூ.60,000 மோசடி

நாமக்கல்: மோகனுார் அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் நவீன். இவர், 2023ல், நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள, எஸ்.வி.எஸ்., ஜூவல்லரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் சபரிசங்கர், 'பழைய நகைகளை தங்களிடம் கொடுத்தால், 7 மாதம் கழித்து, அதே எடைக்கு செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி., எதுவும் இன்றி புதிய நகை வாங்கி கொள்ளலாம்' என, தெரிவித்துள்ளார்.மேலும், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2,000 ரூபாய் வட்டியாக கொடுப்பதாகவும், அப்பணத்தை எப்போது கேட்டாலும் திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதை நம்பி, 2023 ஆக., 12ல், 8 கிராம் தங்க நாணயம் ஒன்றை கொடுத்துள்ளார். அவற்றை வாங்கி கொண்டு, கடந்த ஏப்., 12ல், முதிர்வடையும். செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி., எதுவும் இல்லாமல் புதிய நகை எடுத்து கொள்ளலாம் எனக்கூறி, அதற்கான ரசீதும் வழங்கி உள்ளார்.அதேபோல், நாமக்கல் கிளை மேலாளர் அரசு, நவீனிடம் 'மாதம், 15,000 ரூபாய் கட்டினால், 12 மாதம் கடைசியில் கட்டிய தொகைக்கு செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி., இன்றி, கட்டிய தொகைக்கு நகை பெற்று கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார். அதையும் நம்பி, அதே ஜூவல்லரியில், 2023 ஜூலை, 31ல், மாதம், 15,000 ரூபாய் வீதம், 4 தவணைகளாக, 60,000 ரூபாய் செலுத்தி உள்ளார். இதற்கிடையே, ஜூவல்லரி உரிமையாளர் சபரிசங்கர், பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரியவந்தது.இதையடுத்து, மோசடி செய்யப்பட்டதை அறிந்த நவீன், தான் கொடுத்த பணம் மற்றும் நகையை மீட்டு தருமாறு நாமக்கல் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், எஸ்.வி.எஸ்., ஜூவல்லரியில், 3 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டுதொகை இருப்பது தெரியவந்தது. அதனால், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 'இந்நிறுவனத்தில், நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், திருச்செங்கோடு கிளைகளில் பணம் மற்றும் நகை முதலீடு செய்து பணம் மற்றும் நகை திரும்ப கிடைக்க பெறாமல், ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் புகார் செய்யலாம்' என, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ