5 வகுப்புகள்; ஒரே ஒரு ஆசிரியர்; அவரும் லீவு போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், பெற்றோர்
5 வகுப்புகள்; ஒரே ஒரு ஆசிரியர்; அவரும் 'லீவு'போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், பெற்றோர்எருமப்பட்டி, நவ. 23-பெருமாப்பட்டி அரசு பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பணிபுரிந்து வருகிறார். அவரும், நேற்று விடுமுறையில் சென்றதால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எருமப்பட்டி யூனியன், பெருமாப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில், 52 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் தலைமை ஆசிரியர். தற்போது வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றார். இதனால் கடந்த, 3 மாதமாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டும், 5 வகுப்புகளுக்கும் கூடுதல் பணிச்சுமையில் பாடம் நடத்தி வருகிறார். இதனால், 5 வகுப்புகளையும் முழுமையாக கவனிக்க முடியாததால், ஏழை மாணவர்களின் படிப்பு வீணாகி வருகிறது. ஒரு சில நாட்கள் அந்த ஆசிரியரும் விடுமுறை எடுத்தால், பள்ளியில் ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. சில நாட்களுக்கு முன் பள்ளியில் ஆசிரியர் இல்லாதபோது, மாணவர்களுடன் விளையாடிய போது, ஒரு மாணவரின் கை உடைந்தது. இதனால் ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று அந்த ஒரு ஆசிரியரும் விடுமுறையில் சென்றார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், ஆசிரியர் விடுமுறையில் சென்றதையறிந்து அதிர்ச்சியடைந்தனர்.இதனால், இப்பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்களை நியமிக்க கோரியும்; பள்ளி கட்டடத்தை புதுப்பிக்க கோரியும், பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரண்டு ஆசிரியர்களை நியமிப்பதாகவும், பள்ளி கட்டடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்கு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.