சிமென்ட் குழாயில் பதுங்கிய 5 அடி நீள நாகப்பாம்பு மீட்பு
ப.வேலுார்:-ப.வேலுார், ஜேடர்பாளையம் சாலை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 50; இவர் அதே பகுதியில் சிமென்ட் குழாய் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், தயாரித்து வைத்திருந்த சிமென்ட் குழாய்களை, லாரியில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு சிமென்ட் குழாயில் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று சீறியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சிமென்ட் குழாயில் பதுங்கியிருந்த, ஐந்தடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர். இதனால் தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர். பிடிபட்ட நாகப்பாம்பை, வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.