124 மையத்தில் குரூப்-4 தேர்வு 5,572 தேர்வர்கள் ஆப்சென்ட்
நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில், 124 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 30,864 பேர் பங்கேற்றனர். 5,572 தேர்வர்கள், 'ஆப்சென்ட்' ஆகினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., தட்டச்சர் உள்ளிட்ட, 3,935 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப்-4 போட்டித்தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. காலை, 9:30 முதல், 12:30 மணி வரை நடந்த இந்த தேர்வில், தமிழகம் முழுவதும், 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனுார், திருச்செங்கோடு, ப.வேலுார் ஆகிய, ஏழு தாலுகாவில், 124 மையங்களில் போட்டித்தேர்வு நடந்தது. இதற்காக, மாவட்டம் முழுவதும், 36,436 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு பணியில், 124 முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில், 12 பறக்கும் படை, தேர்வு பொருட்களை எடுத்துச் செல்ல, மண்டல துணை தாசில்தார் நிலையில், 32 நடமாடும் குழுக்கள், தாசில்தார் நிலையில், 124 பேர், ஒரு தாலுகாவிற்கு ஒருவர் வீதம், மொத்தமாக தேர்வு பணிகளை கண்காணிக்க உதவி கலெக்டர்கள், ஏழு பேர், டி.ஆர்.ஓ., சுமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு, தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மேலும், 129 வீடியோ கேமராக்களும், 124 கண்காணிப்பு கேமராக்களும் தேர்வுக்கான வினாத்தாள் மையத்திலும், தேர்வு அறைகளிலும் பொருத்தப்பட்டன. தேர்வு நடந்த, 124 மையங்களிலும், தலா, இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த குரூப்-4 தேர்வை, கலெக்டர் துர்காமூர்த்தி ஆய்வு செய்தார். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், 30,864 பேர் பங்கேற்றனர். 5,572 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.