உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் போலி உத்தரவு தயாரித்தது அம்பலம்

உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் போலி உத்தரவு தயாரித்தது அம்பலம்

நாமக்கல், 'சமூகத்தில் கவுரவமாக வாழவேண்டும் என்பதற்காக, போலி பணி நியமன உத்தரவு, அரசு அடையாள அட்டையை தயாரித்து, வங்கி உதவி மேலாளரை திருமணம் செய்து ஏமாற்றியதாக' போலி ஆர்.டி.ஓ., விசாரணையில் தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெரியமணலி அடுத்த குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 29; வங்கி உதவி மேலாளர். இவருக்கும், நாமக்கல் அடுத்த ராமாபுரம்புதுாரை சேர்ந்த தன்வர்த்தினி, 29, என்பவருக்கும், 2024 ஜூன், 12ல், வையப்பமலையில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, தன்வர்த்தினி பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், திருமணம் முடிந்த சில மாதங்களில், தன்வர்த்தினி ஆர்.டி.ஓ., இல்லை என, தெரியவந்தது. இதனால், நவீன்குமார் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில், நவீன்குமார் புகாரளித்தார். போலீசார், கடந்த, 26ல், தன்வர்த்தினியை கைது செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். பின், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சவீதா தலைமையிலான போலீசார், தன்வர்த்தினியை கஸ்டடி எடுத்து, 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது:தன்வர்த்தினி குரூப்-1, 2 தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவில்லை. அவர், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆர்.டி.ஓ., என வலம் வந்துள்ளார். இதற்காக, அவரே போலியாக ஆர்.டி.ஓ., பணி நியமன உத்தரவு, அடையாள அட்டையை தயாரித்துள்ளார். இவற்றை உண்மை என, நம்பிய நவீன்குமாரை ஏமாற்றி, திருமணம் செய்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !