கடனுக்கு டீ தராததால் குடிமகன் ஆவேசம்; போலீசாரையும் அலைக்கழித்தது அம்பலம்
நாமக்கல்: கடனுக்கு டீ தராததால், லாரி டிரைவர் போலீசுக்கு பொய் தகவல் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் 'ரெய்டு' நடத்தினர்.நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள, அவசர போலீஸ் உதவி எண், '100'க்கு, கடந்த, 7ல், ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பணியில் இருந்த போலீசார் போனை எடுத்ததும், எதிர்முனையில் பேசிய நபர், 'நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே, மார்க்கெட் சாலையில், ராஜாராம் என்பவரின் டீக்கடையில், போதை பொருட்களை ரகசியமாக வைத்து விற்பனை செய்கிறார்' என, தகவல் தெரிவித்துவிட்டு, போன் அழைப்பை துண்டித்தார்.இதையடுத்து, எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து, சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மர்ம நபர் குறிப்பிட்ட டீக்கடைக்கு சென்ற போலீசார், சோதனை யில் ஈடுபட்டனர். ஆனால், போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை.இதனால் மர்ம நபர் கொடுத்த தகவல் போலி என தெரியவந்தது. இதையடுத்து, தகவல் கொடுத்த மொபைல் போன் எண் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் கூறியதாவது: சேந்தமங்கலம், காந்திபுரத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் குமார், 36; அரசமரம் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். காசு இல்லாததால் கடனாக டீ கேட்டுள்ளார். உரிமையாளர் ராஜாராம் தர மறுத்துள்ளார். இதனால் அவரை பழிவாங்க நினைத்த குமார், டீக்கடையில் போதைப்பொருள் விற்பதாக அவசர போலீஸ் உதவி எண், '100' ஐ அழைத்து பொய் தகவல் தந்துள்ளார். சோதனை செய்தபோது மாட்டிக்கொண்டார். இதுபோல் மீண்டும் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். இவ்வாறு கூறினர்.அவசர தேவைக்கு '100''அவசர தொலைபேசி எண்ணான, 100ன் முக்கியத்துவம் அறியாமல், பழிவாங்குவதற்காகவும், காமெடி செய்வதற்காகவும் இதுபோன்ற போலியான தகவல்களை தெரிவிக்கின்றனர். இத்தகையவர்களின் செயலால், அவசர அழைப்பு வந்தால்கூட போலீசார் மெத்தனம் காட்டும் நிலை உருவாகும். அதனால், அவசர தேவைக்கு மட்டுமே, பொதுமக்கள், '100' என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்' போலீசார் தெரிவித்தனர்.