உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்க ரூ.52.54 கோடியில் 3 மேம்பாலம் கட்டும் பணி விறுவிறு

ப.வேலுார் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்க ரூ.52.54 கோடியில் 3 மேம்பாலம் கட்டும் பணி விறுவிறு

ப.வேலுார்,ப.வேலுார் பகுதி புறவழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க, 52.54 கோடி ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம், மூன்று மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை செல்கிறது. அதில், துாத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான சரக்கு வாகனங்களும், ஆம்னி மற்றும் அரசு பஸ்களும் சென்று வருகின்றன. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு செய்தது. அதில், ப.வேலுார் அருகே உள்ள மறவாபாளையம் மற்றும் அணிச்சம்பாளையம் பிரிவுகளில், அடிக்கடி விபத்து நடந்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காவும், விபத்துகளை தடுக்கும் வகையிலும், மறவாபாளையம் பஸ் ஸ்டாப் மற்றும் அணிச்சம்பாளையம் பிரிவில், இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. மேலும், படமுடிபாளையம் பகுதியில் சிறிய வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும்.மேலும், நாமக்கல்-கரூர் புறவழிச்சாலையில், தவிட்டுப்பாளையம் மற்றும் வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில், பொதுமக்கள் வசதிக்காக, இரண்டு நடைபாதைகளுடன் கூடிய சர்வீஸ் சாலையும் அமைக்கப்படுகிறது. 'இந்த மூன்று புதிய பாலங்கள் மற்றும் சர்வீஸ் சாலை பணிக்கு, 52 கோடியே, 54 லட்சத்து, 49,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ