ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கட்டுமான தொழிலாளர் கோரிக்கை
ராசிபுரம்: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா, நேற்று காலை ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. இதில், மாநில தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ஜெகநாதன், கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு கட்டுமான தொழிலாளர்கள் துறையில் கிடைக்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவரியத்தில் வழங்கப்பட்டு வரும் இயற்கை மரணம் உதவித்தொகை, 55,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம், 1,200- ரூபாயில் இருந்து, 1,500- ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரியத்தில் வீடுகட்ட உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து உதவித்தொகை வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினர்.