விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் கோலாகலம்
மோகனுார், மோகனுார் காவிரி ஆற்றில், 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை, போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக கரைத்தனர்.விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர்.இதேபோல், நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, மெட்டாலா, சேலம் மாவட்டம் மல்லுார், பனமரத்துப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை, பக்தர்கள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று மோகனுார் காவிரி ஆற்றில் கரைத்தனர். முன்னதாக, ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர்.தொடர்ந்து, காவிரி ஆற்றின் மையப்பகுதிக்கு எடுத்துச்சென்று தண்ணீரில் கரைத்தனர்.மோகனுார் டவுன் பஞ்., சார்பில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதிக எடையுள்ள சிலைகளை கரைக்க ஏதுவாக, கிரேன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., விஜயராகவன், டி.எஸ்.பி., சக்திவேல், இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட, 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.* ராசிபுரம் பகுதியில், 60, நாமகிரிப்பேட்டை, 70, வெண்ணந்துார், 35, பேளுக்குறிச்சி, 20, ஆயில்பட்டி, 10 மற்றும் கோவில், வீடுகளுக்குள் வைக்கப்பட்டிருந்த, 200க்கும் மேற்பட்ட சிலைகளை, ஊர்வலமாக மோகனுார் காவிரி ஆற்றுக்கு எடுத்து சென்றனர். போலீசார், ஒவ்வொரு சிலை குறித்த விபரங்களை பதிவு செய்து கொண்டனர். 10 வண்டிகள், 20 வண்டிகள் என மொத்தமாக வரிசையாக பாதுகாப்புடன் சிலைகளை கரைக்க அனுப்பி வைத்தனர்.அதேபோல், வெண்ணந்துார் பகுதியில் இருந்து வரும் சிலைகளை ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில் பதிவு செய்து மோகனுார் ஆற்றுக்கு அனுப்பி வைத்தனர்.