உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டிபாசிட் தொகையை 5 ரூபாய் நாணயங்களாக செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை

டிபாசிட் தொகையை 5 ரூபாய் நாணயங்களாக செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை

நாமக்கல்: நாமக்கல்லில் டிபாசிட் தொகை, 12,500 ரூபாயை, ஐந்து ரூபாய் நாணயங்களாக சிறு சிறு பொட்டலமாக கட்டி எடுத்து வந்த சுயேச்சை வேட்பாளர், தன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கடந்த, 20ல் வேட்பு மனு தாக்கல் துவங்கி, இன்றுடன் முடிகிறது. வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளில், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவன தலைவர் காந்தியவாதி ரமேஷ், டிபாசிட் தொகை, 25,000 ரூபாயை, பத்துரூபாய் நாணயங்களாக மூட்டை கட்டி எடுத்து வந்து, வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி, 56, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். இதற்காக, டிபாசிட் தொகை, 12,500 ரூபாயை, ஐந்து ரூபாய் நாணயங்களாக, சிறு சிறு பொட்டலமாக கட்டி கொண்டு வந்தார். தேர்தல் பிரிவு அலுவலர்கள், ஒரு மணி நேரம் நாணயங்களை எண்ணி சரிபார்த்தனர். அதன்பின், மாவட்ட தேர்தல் அலுவலர் உமாவிடம், ராமசாமி தன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.இதுகுறித்து வேட்பாளர் ராமசாமி கூறியதாவது:நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன். மக்கள் பிரதிநிதிகளாக வரும் நபர்கள் யாரும், எங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு எதுவும் செய்வதில்லை. அதனால், கூலி வேலைக்கு சென்று கிடைத்த பணத்தை, ஐந்து ரூபாய் நாணயங்களாக எடுத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நான் ஏற்கனவே, 5 லோக்சபா, 6 சட்டசபை தேர்தல் உள்பட, இதுவரை, 15 தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இது என், 16வது தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், எங்கள் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !