உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒன்றாம் வகுப்பு மாணவனை தாக்கிய தந்தையிடம் விசாரணை

ஒன்றாம் வகுப்பு மாணவனை தாக்கிய தந்தையிடம் விசாரணை

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் யூனியன், கோட்டபாளையம் கிராமம், பெராங்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 30, மனைவி சுகன்யா, 28; இவர்களது மூத்த மகன் தக்ஷன், 6, கோட்டபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வீட்டின் அருகே தக்ஷன் விளையாடிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த தந்தை கார்த்திக், 'தேர்விற்கு ஏன் படிக்கவில்லை' எனக்கூறி, அருகிலிருந்த தடியை எடுத்து, தக்ஷன் முதுகில் அடித்துள்ளார். வலி தாங்க முடியாத சிறுவன் கதறி அழுதுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டனர். சிறுவனுக்கு முதுகில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.அப்பகுதி மக்கள், '1035' என்ற சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த அலுவலர் மோகனசெல்வி, சிறுவனை மீட்டு மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார், சிறுவனின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ