மாரியம்மன் கோவில் விழா காட்டேரி வேடமிட்டு நேர்த்திக்கடன்
நாமக்கல் :நாமக்கல் அடுத்த, நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் நேற்று காட்டேரி வேடம் தரித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் மே, 13ல் காப்புக்கட்டுதல் நிகழ்வு நடந்தது. அதற்காக பக்தர்கள், மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து பெரியசாமி எனும் வேலுக்கு சிறப்பு பூஜை செய்து தீர்த்தம் கொண்டு வந்தனர். தொடர்ந்து அன்று இரவு கம்பம் நடுதல் நடைபெற்றது. கடந்த 28ம் தேதி காலை மாவிளக்கு, மாலை தீமிதி நிகழ்வு நடந்தது. நேற்று கிடா வெட்டுதல், பக்தர்கள் காட்டேரி வேடம் தரித்து திருவீதி முழுவதம் ஊர்வலமாக வந்தனர். காட்டேரி வேடமிட்டு கொண்டவர், வாயில் ஆட்டின் நாக்கை கடித்தபடி வந்தார். அவரிடம் உலக்கைகளை கொண்டு, போக்கு காட்டி ஆடியவர்களை முறத்தால் அடித்தார். 30க்கும் மேற்பட்டவர்கள் காட்டேரி வேடமிட்டு ஆடி வந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா, நாளை கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்கிறது.