ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மறியல்; 70 பேர் கைது
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மறியல்; 70 பேர் கைதுஎருமப்பட்டி, : எருமப்பட்டியில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட, 70 பேரை போலீசார் கைது செய்தனர்.பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி, சில தினங்களுக்கு முன் இரு தரப்பினர் கலெக்ரிடம் மனு கொடுத்தனர். மனுவை விசாரித்த கலெக்டர், பொன்னேரி கைகாட்டியிலும், கருப்பனார் கோவில் அருகிலும் ஜல்லிக்கட்டு நடத்த, முன்னேற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இரு இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு போதிய இடம் உள்ளதா என தாசில்தார், கால்நடைதுறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கால்நடை மருத்துவ துறைக்கு செலுத்த வேண்டிய டிபாசிட் தொகை கட்டுவதற்கு, ஒரு தரப்பினர் சென்ற போது, எருமப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவிற்கு டிபாசிட் தொகை கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, எருமப்பட்டி அரசாணையை வைத்து பொன்னேரி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த அனுமதி வழங்க கூடாது, எருமப்பட்டி டவுன் பஞ், எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரி, நேற்று எருமப்பட்டி ஆர்.ஐ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.தாசில்தார் வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அங்கிருந்தவர்கள் சேர்களை கொண்டு வந்து சாலை ஓரம் போட்டு அமர்ந்தனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை தாசில்தார் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் யுவராஜ் சமாதானம் செய்து வைத்ததுடன், அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்தியதாக, 70க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.இது குறித்து தாசில்தார் வெங்கடேசன் கூறுகையில்,'' எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் ஆன்லைனில் பணம் கட்டியுள்ளனர். மற்றொரு தரப்பினர் பணம் கட்டவில்லை, அவர்களும் பணம் கட்டினால், அரசுக்கு அனுப்பி ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடத்துவது என்பது குறித்த அனுமதி வழங்கப்படும்,'' என்றார்.