கொல்லிமலை அரசு பள்ளி மாணவியர் உருவாக்கிய அன்னாசி அறுவடை கருவி
நாமக்கல்:கொல்லிமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர், அன்னாசி பழம் அறுவடை செய்யும் கருவியை உருவாக்கி அசத்தி உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுகா, நத்துக்குழிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவி சத்யா தலைமையில், அன்னாசி பழம் அறுவடை கருவியை மாணவியர் உருவாக்கி உள்ளனர்.எளிய முறையில் வடிவமைக்கப்பட்ட, 'அன்னாசி பழம் அறுவடை கருவி' விவசாயிகளின் பாராட்டை பெற்றுள்ளது.இதுகுறித்து, மாணவியர் சத்யா, தர்ஷனா, பூவரசி, அபி, வினோதினி ஆகியோர் கூறியதாவது:நாங்கள், கொல்லிமலை, குண்டூர் நாட்டில் உள்ள நத்துக்குழிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள மலைவாழ் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். இதையடுத்து, அன்னாசி பழம் அறுவடை கருவியை உருவாக்கினோம். இந்த கருவியை உருவாக்க, பி.வி.சி., பைப், இரும்பு கம்பி, சிறிய கத்தி, ஸ்பிரிங்கை பயன்படுத்தினோம்.இரண்டு பி.வி.சி., பைப்களில் இரும்பு கம்பியை பொருத்தி, அவற்றின் இடையில் ஸ்பிரிங் இணைத்து, கத்தியை செட் செய்தோம். தொடர்ந்து, அன்னாசி பழத்தின் இருபுறமும் கருவியை நிறுத்தி, இரண்டு கைப்பிடியையும் இறுக்கினால், அன்னாசி பழத்தை கத்தி கட் செய்து விடும்.அதன் மூலம், விவசாயிகள் முள் குத்தாமல், அன்னாசியை அறுவடை செய்யலாம். இந்த கருவியை உருவாக்க, 500 ரூபாய் மட்டுமே செலவானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.