தெருக்களில் ஓட்டுச்சாவடி: போலீஸ் கடும் கெடுபிடி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 237 ஓட்டுச்சாவடிகளில், மாநகராட்சியின், 33 வார்டுகளுக்குள், 90 சதவீத ஓட்டுச்சாவடி அமைந்துள்ளன. அவை அனைத்தும் பிரதான சாலை, ஒதுக்குப்புறமாக இல்லாமல், வீடுகள் நிறைந்த தெருக்களுக்குள் அமைந்துள்ளன.ஓட்டுச்சாவடிகளில் இருந்து, 100 மீட்டர், 200 மீட்டர் என எல்லைக்கோடு வரைந்து, வாகனங்கள் நிறுத்துதல், வாகனங்களில் வந்து செல்வதையும் போலீசார் கடுமையாக தடுத்தும், பேரிகார்டு வைத்து தடுத்தும் நெருக்கடி கொடுத்தனர். தில்லை நகர், அக்ரஹாரம், பெரியார் வீதி போன்ற பல இடங்களில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதமும், சண்டையும் நடந்தது. 'அடுத்த முறை இங்கு ஓட்டுச்சாவடி அமைக்காதீர்கள். வேறு எங்காவது அமையுங்கள்' என கூறும் அளவுக்கு, வாகனங்களை நிறுத்த அனுமதிக்காததால், ஓட்டுப்போடாமல் பலர் திரும்பியதையும் பார்க்க முடிந்தது.* கிருஷ்ணம்பாளையம் ஓட்டுச்சாவடியில், நாராயணி என்ற பெண் மயங்கி விழுந்தார். அங்கு மருத்துவ முகாம் அமைத்திருந்த போதிலும், முதலுதவிக்கு வழங்க மருந்து ஏதுமில்லை.* சம்பத் நகர் அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.பெ.அக்ரஹாரம் அரசு இசைப்பள்ளி, கிறிஸ்து ஜோதி பள்ளியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி, சில நிமிடங்கள் ஓட்டுப்பதிவு பாதித்து, பின் சீரானது. ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலை, புனித அமல அன்னை ஆலயம் அருகே ஆர்.சி.பள்ளி ஓட்டுச்சாவடியில் இயந்திரம் பழுதாகி, 45 நிமிடங்களுக்கு மேல் ஓட்டுப்பதிவு நின்று, பின் துவங்கியது.* நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி கழுத்தில் கட்சி கொடி துண்டு போட்டு ஓட்டுச்சாவடி வளாகம் வந்ததை அனுமதிக்காத போலீசார், தி.மு.க.,வினர், தி.மு.க., முகவர்கள் கரை வேட்டி, கரை துண்டுடன் செல்ல அனுமதித்தனர்.* ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி ஓட்டுச்சாவடியும், காளைமாட்டு சிலை அருகே சுப்பராயலு வீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இளம் அலுவலர்கள் பணி செய்த ஓட்டுச்சாவடியும், பன்னீர்செல்வம் பூங்கா அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மட்டுமே பணி செய்யும் ஓட்டுச்சாவடியும், ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் அலுவலர்கள் பங்கேற்ற ஓட்டுச்சாவடி நிறுவி, பணி நடந்தது.* அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மருத்துவ முகாம் அமைத்தாலும், சுகர், பிரஷருக்கு வழங்கும் மாத்திரைகள் கூட இல்லை.* தேர்தல் ஆணைய மொபைல் ஆப் மூலம், மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்து, 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து ஓட்டுப்பதிவு செய்து சென்றனர்.