டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ராசிபுரம், பருவமழை காலம் தொடங்கியதை அடுத்து, டெங்கு பரவாமல் தடுக்க நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகர் பகுதியில் தெரு, சந்து, வீடு ஓரங்களில் உள்ள சிரட்டை, டயர், உரல் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுபோன்ற தண்ணீரில் தான் டெங்கு கொசு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து தான் டெங்கு கொசு உற்பத்தியாவதுடன் பொதுமக்களையும் கடித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே, டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதை அகற்றும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சேர்மன் கவிதா, நகராட்சி ஆணையாளர் நிவேதிதா ஆகியோர் முன்னிலையில், கடந்த இரண்டு நாட்களாக வீதி, வீதியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பழைய டயர் கடைகள், லாரி பட்டறைகளில் தேங்கி கிடக்கும் தேவையற்ற நீர் தேங்க கூடிய டயர்கள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பொருட்களை தீவிரமாக ஆய்வு செய்து அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து கட்டுப்பாடுகளை பின்பற்றாத வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. துப்புரவு அலுவலர் செல்வராஜ், களப்பணி உதவியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.