நாமக்கல்: ராசிபுரத்தில், தற்போது நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதையை மாற்றக்கோரி தனியார் பஸ் டிரைவர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், நாமக்கல், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நுாற்றுக்கணக்கான அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த, 30 ஆண்டுகளாக, ராசிபுரம் புது பஸ்டாண்டில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல்லுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் மாதாகோவில், காஞ்சிசூப்பர் மார்க்கெட் வழியாக பழைய பஸ் ஸ்டாண்டு சென்று குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்றடையும்.தற்போது, புதிதாக ஒரு வழிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் புது பஸ்டாண்டிலிருந்து, பஸ்கள் புறப்பட்டால் ஆத்துார் சாலை மார்கமாக சென்று, டி.வி.எஸ்., கார்னர், பூவாயம்மாள் திருமண மண்டபம், கிருஷ்ணா தியேட்டர் வழியாக சென்று பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்து சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் நேரம் செலவாகிறது. பயணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், ஆங்காங்கே வேகத்தடைகள் இருப்பதாலும், குறுகிய சாலையில் வாகனங்களை நிறுத்தியிருப்பதாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. அவசரமாக பஸ்கள் செல்லும்போது விபத்துகள் நேரிடுகிறது.எனவே, மாதா கோவில், காஞ்சி மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக பஸ்களை இயக்குவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.