இரட்டிப்பு பணம் கிடைக்கும்: என கூறி ரூ.8.71 லட்சம் மோசடி
நாமக்கல்: பங்குசந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் எனக்கூறி, பெண்ணிடம், 8.71 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோம்பை நகரை சேர்ந்தவர் கோகிலவேணி, 29. இல்லத்தரசி. இவரது, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்திற்கு, 'லிங்க்' ஒன்று வந்துள்ளது. அதை, கிளிக் செய்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, ஆன்-லைன் மூலம் பங்குசந்தையில் டிரேடிங் செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என, மர்ம நபர்கள் ஆசையை வளர்த்துள்ளனர். உண்மை என நம்பிய கோகிலவேணி, ஐந்து தவணைகளாக தன் வங்கி கணக்கில் இருந்து, 8 லட்சத்து, 81,600 ரூபாய் அனுப்பி உள்ளார். அதில், 10,000 ரூபாய் மட்டுமே வங்கி கணக்கிற்கு திரும்பி வந்தது. மீதமுள்ள, 8 லட்சத்து, 71,000 ரூபாய் திரும்பிவரவில்லை.ஏமாற்றப்பட்டதையறிந்த கோகிலவேணி, நேற்று முன்தினம், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்படி, சைபர் கிரைம் போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.