சொந்த ஊர் திரும்பிய மாரியப்பன் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
ஓமலுார்: பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு, பெரிய வடகம்பட்டி கிராம மக்கள் உற்சாக வர-வேற்பு அளித்தனர்.பாரிஸில் நடந்த பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், வெண்கலம் வென்றார். அவர் நேற்று பெங்களூருவில் இருந்து கார் மூலம் சொந்த ஊரான, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, பெரிய வடகம்பட்டிக்கு வந்தார். முன்னதாக அவரை, கிராம மக்கள், தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க வர-வேற்பு அளித்தனர்.தொடர்ந்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி மலர் கொத்து வழங்கி வரவேற்றார். மேட்டூர் சப் கலெக்டர் பொன்மணி, பயிற்சி கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட விளை-யாட்டு அலுவலர் சிவரஞ்சன் உடனிருந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் மாரியப்பனை தோளில் துாக்கி, ஆளுயர மாலை அணி-வித்து மகிழ்ந்தனர். இதையடுத்து தேசிய கொடியுடன் மலர்-களால் அலங்கரிக்கப்பட்ட காரில், மாரியப்பன் வெண்கல பதக்-கத்தை காட்டியபடி, அவரது தாய் சரோஜாவுடன் ஊர்வலமாக, பெரியவடகம்பட்டி வீடு வரை அழைத்துச்செல்லப்பட்டார்.மாரியப்பன் கூறுகையில், ''உடல் நிலை, தட்பவெப்ப நிலையால் இம்முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேன். அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் வெல்வதே இலக்கு,'' என்றார்.