நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கு வாய்ப்பு
ராசிபுரம், மே 9நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சப்-டிவிசனில் வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் ஆகிய ஸ்டேஷன்களுக்கு சேர்த்து, ஒரு இன்ஸ்பெக்டர் பணியில் உள்ளார். இவருடைய அலுவலகம் பேளுக்குறிச்சியில் உள்ளது. ஆனால் மற்ற இரண்டு ஸ்டேஷன்களும், சேலம் மாவட்ட எல்லையில் உள்ளன. மங்களபுரம் ஸ்டேஷன் பேளுக்குறிச்சியில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் உள்ளது. மங்களபுரம் ஸ்டேஷன் எல்லை அங்கிருந்து, 10 கி.மீ., சுற்றளவுக்கு உள்ளது. இது சேலம் மாவட்ட எல்லையான மல்லியகரை வரை பரவியுள்ளது. இதனால், திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் பாதிக்கப்பட்டவர்கள், 30 கி.மீ., துாரத்தில் உள்ள பேளுக்குறிச்சிக்குதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் போலீசாருக்கும் இது பெரும் பிரச்னையாகஉள்ளது.இதேபோல், கொல்லிமலையில் உள்ள செங்கரை, வாழவந்திநாடு ஸ்டேஷனுக்கு உரிய இன்ஸ்பெக்டர் அலுவலகம் சேந்தமங்கலம் ஸ்டேஷனில் உள்ளது. முக்கியமாக கொல்லிமலை செங்கரை பகுதியில் பிரச்னை என்றால், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர், 50 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். எனவே, நீண்ட நாட்களாக பேளுக்குறிச்சி, ஆயில்பட்டிக்கு தனி இன்ஸ்பெக்டர் மற்றும் செங்கரை, வாழவந்திநாடுக்கு தனி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக, ஐந்து இன்ஸ்பெக்டர்களை நியமிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக, ஐந்து இன்ஸ்பெக்டர் பணியிடம் தோற்றுவிக்க வாய்ப்புள்ளது. ஆயில்பட்டி, மங்களபுரத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், செங்கரை, வாழவந்திநாடு பகுதிக்கு ஒரு இன்ஸ்பெக்டர் வர வாய்ப்புள்ளது. அதேபோல், எருமப்பட்டி, மல்லசமுத்திரம், மொளசி ஆகிய ஸ்டேஷன்களுக்கு தலா ஒரு இன்ஸ்பெக்டர் பணியிடம் வர வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.இவ்வாறு கூறினர்.