காற்றுக்கு சாய்ந்த மக்காச்சோள பயிர் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு
சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டத்தில், பரமத்தி வேலுார், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளி பயிரிட்டு வந்தனர். மரவள்ளியில் நோய் தாக்கம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், சில ஆண்டாக மரவள்ளி பயிரிடுவதற்கு பதிலாக, மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் இந்த மக்காச்சோளத்திற்கு, நாமக்கல்லில் அதிக விலை உள்ளதால், பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதேபோல், கடந்த மாசி பட்டத்தில் வேலகவுண்டம்பட்டி, தளிகை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதியில், 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டனர். இந்த மக்காச்சோளம் அறுவடை செய்யும் நிலைக்கு வந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், மக்காச்சோள பயிர்கள் வயலில் சாய்ந்தன.சாய்ந்த மக்காச்சோள பயிரை இயந்திரத்தில் அறுவடை செய்ய முடியாது. அறுவடைக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால், அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் வெயிலில் காய்ந்து வீணாகி வருகிறது.