பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பயிலரங்கம்
நாமக்கல், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகிகளுக்கான பயிலரங்கம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். சங்க நிறுவன தலைவர் மாயவன் பங்கேற்று, 'ஸ்தாபனமும் இயக்க வரலாறும்' என்ற தலைப்பில் பேசியதாவது: இந்த சங்கம், 1998ல் துவங்கப்பட்டு, 2000ல் பதிவு செய்யப்பட்டு, 17,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாாணவர்களின் நலனுக்காகவும் செயல்பட்டு வருகிறது. மேலும், எந்த நேரத்திலும், எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், சிறப்பான முறையில், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக சங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதேபோல், தற்போதைய நிர்வாகிகளும் திறம்பட செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, மாநில தலைவர் ஜெயகுமார், 'இயக்கமும், இயக்குதலும்' என்ற தலைப்பிலும், மாநில பொதுச்செயலாளர் குமரேசன், 'தொழிற்சங்கமும் கோரிக்கைகளும்' என்ற தலைப்பிலும், சட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், 'தலைமைப் பண்பு' என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தனர். மாநில, மாவட்ட, தாலுகா நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.