வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
மோகனுார், சேலம் மாவட்டம், கருமந்துறையை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் இளையராஜா, 22; பி.காம்., முடித்துள்ளார். இவரது தங்கை வித்யா, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தனது தங்கை மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக, இளையராஜா, நேற்று நாமக்கல் வந்துள்ளார். நேற்று மாலை, 5:30 மணிக்கு, தனது நண்பர்களுடன், மோகனுார் - நாமக்கல் சாலை, லத்துவாடி பிரிவு சாலையில் உள்ள கிணற்றின் அருகே, தன் நண்பர்கள் பசுபதி, ஆனந்த் ஆகியோருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, திடீரென கிணற்றில் இளையராஜா குதித்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், அதற்குள் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இளையராஜா உயிரிழந்தார். மோகனுார் போலீசார், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படைவீரர்கள், ஒரு மணி நேரம் போராடி இளையராஜாவின் உடலை மீட்டனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.