சேறும் சகதியுமாக மாறும் பஸ் ஸ்டாண்ட் வளாகம்; மூன்று மாநில பயணிகள் கடும் அதிருப்தி
கூடலுார் : கூடலுாரில் பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, 5.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனையை பிப்., 25ம் தேதி முதல், திறந்து செயல்பட்டு வருகிறது.பஸ் ஸ்டாண்ட் விரிவு படுத்தும் வகையில், அதனை ஒட்டிய பணிமனை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மாற்றப்பட்டது. ஆனால், பணிமனை பகுதியை பஸ் ஸ்டாண்டாக விரிவுபடுத்தும் பணி, துவங்கப்படவில்லை. இதனால், ஏற்கனவே பயன்படுத்தி வந்த பகுதி மட்டும் பஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தி வந்தனர்.இடப்பற்றகுறைவினால் பல பஸ்கள் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்நிலையில், பஸ்ஸ்டாண்டை விரிவுபடுத்தும் வகையில், பழைய பணிமனை பகுதி இடிக்கப்பட்டு, அங்கிருந்து கருங்கற்கள் உள்ளிட்ட பயனற்ற பொருள்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.இதனிடையே, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மழையின் போது தேங்கும் நீரால், பஸ்கள் இயக்கவும், பயணிகள் பஸ்சில் இறங்கவும், ஏறுவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பழைய பணி மனையிலிருந்து அகற்றப்பட்ட, மண்ணை பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கும் பகுதியில் கொட்டி சமன் செய்தனர்.இந்நிலையில், அடிக்கடி பெய்யும் மழையால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி வருவதால் அதனை கடந்து பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, மூன்று மாநில வாகனங்கள் வந்து செல்லும் அப்பகுதியை மீண்டும் மழை வரும் முன், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.