அரசு பஸ்சை ஓட்டி சென்ற போதை ஆசாமி
பந்தலூர்;பந்தலுாரில் அரசு பஸ்சை இரவில் ஓட்டி சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, பந்தலூர் அருகே கரியசோலை என்ற இடத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இரவில் கரியசோலை பேருந்து நிறுத்தம் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் பஸ், காலை 6:00 மணிக்கு அங்கிருந்து கூடலூருக்கு புறப்படும். இரவு பஸ்சை டிரைவர் பிரசன்ன குமார், கண்டக்டர் நாகேந்திரன் ஆகியோர் நிறுத்தி விட்டு, அருகிலுள்ள அறைக்கு உறங்க சென்றனர்.நேற்று காலை வந்து பார்த்தபோது பஸ்சை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இருவரும், அந்தப் பகுதி பொதுமக்கள் உதவியுடன் பஸ்சை தேடிப் பார்த்தனர். பஸ் கரியசோலை பகுதியில் இருந்து தேவாலா செல்லும் சாலையில் 3 கி.மீ., தொலைவில், சாலையோர தடுப்பில் மோதியப்படி நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. நெலாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் தேவாலா வாழவயல் பகுதியைச் சேர்ந்த முகம்மது என்பவரின் மகன், ரிஷால் 21, என்ற இளைஞர் தேவாலாஹட்டியில் நிறுத்தப்பட்டிருந்த, செல்வகுமார் என்பவரின் பைக்கை திருடிச் சென்று கரியசோலையில் நிறுத்திவிட்டு, பஸ்சை ஓட்டி சென்றது தெரியவந்தது. நெலாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.