புல்வெளியில் யானை கூட்டம்; இடையூறு வேண்டாம்
கூடலுார் : 'கூடலுார் நாடுகாணி பகுதி புல்வெளிகளில் முகாமிட்டு வரும் காட்டு யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுாரில் பருவமழையை தொடர்ந்து, பசுமைக்கு மாறிய வனப்பகுதிகளில், காட்டு யானைகள் அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. அவைகள், புல்வெளிகளில், குட்டிகளுடன் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டு வருவதை, உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.அதில், நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் யானை கூட்டத்தையும், அதில், சில யானைகள் படுத்து உறங்குவதையும் நாள்தோறும் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'பருவமழை தொடர்ந்து பசுமையான புல்வெளிகளில் காட்டு யானைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால், அவைகள் அங்கு முகாமிட்டு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க அவைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.கிராமங்களில், காட்டு யானைகள் நுழைந்தால், இடையூறு ஏற்படுத்தாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால், அதனை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், யானைகளால் ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள், வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.