உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினரை தொழில் முனைவோராக்கும் திட்டம்; ரூ. 14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பழங்குடியினரை தொழில் முனைவோராக்கும் திட்டம்; ரூ. 14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஊட்டி; தாட்கோ மூலம் தொழில் முனைவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் , பழங்குடியினர் பயன்பெறும் வகையில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில், நடமாடும் உணவகத்துடன் கூடிய வாகனங்கள் வழங்கப்பட்டது. ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நடமாடும் உணவகத்துடன் கூடிய வாகனங்களை கலெக்டர் லட்சுமி பவ்யா வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்மேம்பாட்டு கழகம் 'தாட்கோ' மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், 'பிரதம மந்திரி அனுசு சித்ஜாதி அபுய்தய் யோஜனா' திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், கல்வி கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பழங்குடியினர்கள் பயன் பெறும் வகையில், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், இரண்டு பழங்குடியினர்களை தொழில் முனைவோர்களாக மாற்று வகையில், 14.92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு நடமாடும் உணவகத்துடன் கூடிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிகமாக பயன்படுத்தும் சாலையான சேரிங்கிராஸ் மற்றும் பழங்குடியினர் பண்பாட்டு மையம் ஆகிய பகுதிகளில் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். 'தாட்கோ' மேலாண்மை இயக்குனர் கந்தசாமி உட்பட பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ