உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானைக்கு இடையூறு; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

காட்டு யானைக்கு இடையூறு; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

கூடலுார் : முதுமலையில் காட்டு யானைக்கு இடையூறு ஏற்படுத்திய இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.முதுமலை புலிகள் காப்பகம், வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், 'வனவிலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்த கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.இந்நிலையில், தெப்பக்காடு - மசினகுடி சாலையில், பைக்கில் பயணித்த சுற்றுலா பயணிகள் இருவர், காட்டுயானை அருகே, பைக்கை நிறுத்தி இறங்கி சென்று அதற்கு இடையூறு ஏற்படுத்தினர். கோபமடைந்த யானை அவர்களை துரத்தியது. அவர்கள் பைக்கில் ஏறி உயிர் தப்பினர். இதனை, அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணி வீடியோவாக பதிவு செய்த துடன், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.தொரப்பள்ளி சோதனை சாவடியில், சுற்றுலா பயணிகள் இருவரை வனத்துறையினர் பிடித்து, விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், 'கேரளா மலப்புரத்தை சேர்ந்த அனிஸ்,28, சாருக்,27,' என, தெரிய வந்தது. அவர்களுக்கு தலா, 2,500 வீதம் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர். அபராத தொகை செலுத்தியதை தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் விடுவித்தனர்.வனத்துறையினர் கூறுகை யில், 'யானை காட்டெருமை போன்ற வனவிலங்குகள் மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், வனவிலங்குகள் அருகே, வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்த கூடாது; மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !