சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விநாயகர் சதுர்த்தி விழா
பந்தலுார்:'--இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், விநாயகர் சிலைகளை உருவாக்கி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்,' என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை; மாசு கட்டுப்பாட்டு வாரியம்; தேசிய பசுமை படை இணைந்து, பந்தலுார், 'டியூஸ்' மெட்ரிக் பள்ளியில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், விநாயகர் சிலைகள் உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாமை நடத்தின.பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் வரவேற்றார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் தலைமை வகித்து பேசுகையில், ''விநாயகர் சிலைகளை வணங்குவது என்பது அனைத்து இடங்களிலும் உள்ளது. அதில், மக்களை ஒன்றிணைத்து, விழா நடத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது துவக்கப்பட்டது. கடந்த காலங்களில் களிமண்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பூஜைகள் செய்யப்பட்டு தண்ணீரில் கரைக்கப்படும். தற்போது சிலைகள் அழகாகவும், கண்களை கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, பல்வேறு ரசாயனங்கள் பூசப்பட்டு சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது, அங்கு வாழும் நீர்வாழ் உயிரினங்கள், ரசாயனங்களால் பாதிக்கப்பட்டு அழியும் நிலை தொடர்கிறது. இந்த நிலை மாற, இளைய தலைமுறையினர் களிமண்ணால் விநாயகர் சிலைகள் உருவாக்கி, அதில் விதைகள் போட்டு அவற்றை வணங்கி தண்ணீரில் கரைக்கும்போது, இயற்கையும் பாதுகாக்கப்பட்டு, மரங்கள் செடிகள் வளரவும் ஏதுவாக அமையும்,'' என்றார்.தொடர்ந்து, கலை பொருட்கள் பயிற்சியாளர் சங்கீதா, இலைகள், தென்னை ஓலைகள் மற்றும் களிமண், தண்ணீர் பாசிகளால் சிலைகள் வடிவமைப்பது குறித்து, செயல்முறை விளக்கம் அளித்தார்.