| ADDED : ஜூலை 25, 2024 09:53 PM
குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில், 23.40 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை தூள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கடந்த, 6 வாரங்களாக தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்து துாள் உற்பத்தியும் உயர்ந்துள்ளது.இதனால், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 29வது ஏலத்தில் தேயிலை துாள் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்தது.ஏலத்துக்கு, '20.48 லட்சம் கிலோ இலை ரகம்; 6.76 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 27.24 லட்சம் கிலோ தேயிலை துாள் வந்தது. அதில், '17.39 லட்சம் கிலோ இலை ரகம்; 4.95 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 22.34 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 23.40 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.சராசரி விலை கிலோவுக்கு, 104.67 ரூபாய் என இருந்தது. 2 ரூபாய் வரை வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த வாரத்தை விட இந்த ஏலத்தில்,1.54 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. 'கடந்த ஏலத்தில், 77.71 சதவீத விற்பனையான நிலையில், நடப்பு ஏலத்தில், 82.02 சதவீதம்,' என, உயர்ந்தது. மொத்த வருமானமும், 2.11 கோடி ரூபாய் அதிகரித்தது.